கேரளத்தில் கண்ணகி வழிபாடும் கொடுங்கல்லூர் கோவிலும்

கேரளத்தில் கண்ணகி வழிபாடும் கொடுங்கல்லூர் கோவிலும்

 Author: அ.கா.பெருமாள்  Publisher: நீயூசெஞ்சூரி புக் ஹவுஸ், சென்னை  Published: Dec, 2022  Pages: - 212

சிலப்பதிகாரத்தின் நாயகியான கண்ணகி தமிழ் மண்ணில் பிறந்து சிறப்பு பெற்றாலும் அவளுக்கு வழிபாடு நடத்துகின்றவர்கள் கேரளத்து மக்களே. கேரளத்தில் கண்ணகி குறித்த தொன்மங்களும் வாய்மொழி கதைகளும் பாடல்களும் எழுத்து வடிவ கதைப்பாடல்களும் நிறையவே கிடைக்கின்றன. கண்ணகி முக்கிய தெய்வமாக வழிபாடு பெற்று வரும் கோவில்களும் இந்த மாநிலத்தில் உள்ளன. இன்றைய நிலையில் கேரளக் கண்ணகி கோவில்கள் பல பகவதி கோவில்களாக மாறிவிட்டன திரிசூர் மாவட்டம் கொடுங்கல்லூர் ஊரில் உள்ள பகவதி கோவில் இன்னும் தன் அடையாளத்தை இழக்கவில்லை. இந்த விஷயங்களை இந்நூல் விரிவாக விளக்குகிறது.

இந்நூலில் ஆறு அத்தியாயங்கள் உள்ளன. முதலில் கேரளம் பற்றிய செய்திகளும், தொடர்ந்து கேரளத்தில் தாருகன் கதை, கண்ணகி கதை குறித்த செய்திகளும் வருகின்றன. அடுத்து சிலப்பதிகாரத்திற்கும் கேரளக் கண்ணகிக்கும் உள்ள தொடர்பு குறித்த செய்திகள் வருகின்றன. அடுத்து கொடுங்கல்லூர் பகவதி என்னும் கண்ணகி கோவில் பற்றிய செய்தி விரிவாகத் தரப்பட்டுள்ளது. அடுத்த இயல் புகழேந்திப் புலவர் பெயரில் உள்ள கோவலன் கதை கேரளத்தில் பெற்ற செல்வாக்கு குறித்து விவரிக்கிறது. இறுதியாக ஈழம் கேரளம் கண்ணகி வழிபாடு குறித்து செய்திகள் வருகின்றன. பின்னிணைப்பில் 25 தலைப்புகளில் கண்ணகி தொடர்பான செய்திகள் உள்ளன. குறிப்பாக மலையாளத்தில் அமைந்த கோவலன் சிலம்பு விற்கான் போயகதா என்னும் நீண்ட பாடலின் மொழிபெயர்ப்பு உள்ளது. இந்த ஆய்வு செம்மொழி தமிழ் ஆய்வு மத்திய நிறுவனத்திற்கு கொடுக்கப்பட்ட அறிக்கையின் மாற்று வடிவம். இந்த அறிக்கை தயாரிப்பதற்காக உடன் வந்து மிகவும் உதவியவர் செந்திநடராசன் அவர்கள்.